கோவை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், கோவை மாவட்டத்தில், 1,800 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் துவக்க விழா, ராமநாதபுரம் எஸ்.என்., அரங்கத்தில் நேற்று நடந்தது.
கர்ப்பிணிகளுக்கு கலெக்டர் பவன்குமார், எம்.பி., ராஜ்குமார் ஆகியோர் ஒரு சில்வர் தட்டில் சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழங்கள் போன்ற சீர் வரிசை பொருட்களை வழங்கினர். எலுமிச்சை, புளி, தக்காளி, புதினா, தயிர் ஆகிய வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது.
கலெக்டர் பவன்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ”கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக, அறிவானதாக இருக்கும். வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ள கர்ப்பிணிகளின் குழந்தைகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, சமுதாய ஏற்றத்தாழ்வின்றி, தொலைநோக்கு பார்வையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பருவத்தில் வழங்கப்படும் நல்ல ஊட்டச்சத்து, குழந்தைகளுக்கு செழிப்பான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்,” என்றார்.
நிகழ்ச்சியில், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஷீலா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு
கலெக்டர் பவன்குமார் மேலும் கூறுகையில், ”மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான குடிநீர் சப்ளை செய்கிறோம். குடிநீர் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. பாதிக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கிறோம். சாலை சீரமைப்புக்கு மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறைஅதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அழைத்து ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தி, அறிவுரை வழங்கினோம். எந்தெந்த இடத்தில் ரோடு தோண்டப்பட்டு இருக்கிறதோ, உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம். சாலை சீரமைப்பு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு ஆய்வு கூட்டம் நடத்தப்படும்,” என்றார்.