கருப்பு நிற தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள்; நிறம் மாறிய பவானி ஆறு! உடல் நலம் பாதிக்கப்படுமோ என்று அச்சம்

0
49

மேட்டுப்பாளையம்; பவானி ஆற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் வருவதால், இதை குடித்தால் உடல் நலம் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வரை, பவானி ஆற்றில், 17 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆற்றுத் தண்ணீரால், பல லட்சம் மக்கள் குடிநீர் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை, சுத்தம் செய்து அதன்பின் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஆற்றில், தண்ணீர் நிறம் மாறி வருகிறது. ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை ஜடையம்பாளையம், சிக்காரம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர், சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாலும், குடிநீர் நிறம் மாறாமல் இருப்பதோடு, ஒருவித வாசம் அடிக்கிறது என, பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து ஜடையம்பாளையம் ஊராட்சி மக்கள் கூறியதாவது: பவானி ஆற்று தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீரை ஊராட்சியின் சார்பில் சுத்தம் செய்து விநியோகம் செய்து வருகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக, கருப்பு நிறம் கலந்த பச்சை நிறத்தில் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் போது சுவை மாறி இருப்பதோடு, உடனடியாக சளி பிடிக்கிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீரை இருப்பு வைத்தால், ஒருவித வாசம் அடிக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.

இது குறித்து ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி கூறியதாவது: ஜடையம்பாளையம் ஊராட்சி மக்களுக்கு, பவானி ஆற்று தண்ணீரை குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.

ஆலாங்கொம்பு பழையூரில் அருகே பவானி ஆற்றில் தண்ணீரை எடுத்து, சுத்தம் செய்து, ஆலாங்கொம்பு, வீராசாமி காலனி, தொட்டபாவி, ராமம்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஆற்றில் தண்ணீர் கருப்பாக இருப்பதால், அதை எவ்வளவு சுத்தம் செய்தாலும், நிறம் மாறாமலும், வாசனையும் அடிக்கிறது. இந்த தண்ணீரை குடிக்கும் பொது மக்களுக்கு, உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக பவானி ஆற்றுத் தண்ணீரை பரிசோதனை செய்து, கருப்பு நிறமாக மாறுவதற்கு என்ன காரணம் என, பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் கூறியதாவது : மேட்டுப்பாளையம் நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும், பவானி ஆற்றில் கலக்கிறது. அந்த தண்ணீர் சங்கர் நகர் அருகே வெள்ளிபாளையம் சாலையில் கட்டியுள்ள கதவணையில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு ஆற்றில் தேக்கி வைத்த பின், மின் உற்பத்திக்காக தண்ணீரை திறந்து விடுகின்றனர். மேலும் பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 91 அடிக்கு இருப்பதால், அணை தண்ணீர், ஆலாங்கொம்பு வரை பவானி ஆற்றில் தேங்கியுள்ளது.

கதவணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஆற்றில் வேகமாக செல்லாமல், அப்படியே தேங்கி நிற்பதால், கழிவு நீர் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலாங்கொம்பில், பவானி ஆற்றுத் தண்ணீரை எடுத்து, நிறம் மாறுவதற்கு என்ன காரணம். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.