கரடி தாக்கி பெண் படுகாயம்

0
91

வால்பாறை அருகே கரடி தாக்கி பெண் படுகாயம் அடைந்தார். அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கரடி தாக்கியது

வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் மேல் பிரிவு பழையபாடி பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் சொர்வார். இவருடைய மனைவி சபிதாகுமாரி(வயது 19). இவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.50 மணியளவில் சபிதாகுமாரி வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பதுங்கி இருந்த கரடி ஒன்று திடீரென அவரை நோக்கி ஓடி வந்தது. இதை சற்றும் எதிர்பாராத சபிதாகுமாரி கூச்சலிட்டுக்கொண்டே வீட்டை நோக்கி ஓடினார். எனினும் துரத்தி வந்த கரடி, அவரை கடித்து தாக்கியது. சத்தம் கேட்டு பிரகாஷ் சொர்வார் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை கண்டதும் கரடி அங்கிருந்து தேயிலை தோட்டத்துக்குள் ஓட்டம் பிடித்தது.

போராட்டம் நடத்துவோம்

பின்னர் படுகாயம் அடைந்த சபிதாகுமாரியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை அறிந்ததும் மானாம்பள்ளி வனத்துறையினர், எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் வனத்துறையின் நிவாரண தொகையான ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் கடந்த மாதம் 18-ந் தேதி தங்கம் என்ற தொழிலாளியை குட்டியுடன் வந்த கரடி தாக்கியது. அப்போது கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிக்காமல், தற்போது மீண்டும் பெண் ஒருவரை தாக்கியுள்ளது. எனவே அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.