கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை

0
59

தொழிலாளியை தாக்கிய கரடிகள்

வால்பாறை அருகில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 54). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு இஞ்சிப்பாறை மேல் பிரிவு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். இஞ்சிப்பாறை எஸ்டேட் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அங்குள்ள புதருக்குகள் பதுங்கி இருந்து கரடிகள், தங்கத்தின் மீது பாய்ந்து அவரை தாக்கியது.

இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார். மேலும் அந்த வழியாக வந்த ஆட்டோவினால் அந்த கரடிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. இந்த நிலையில் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்ததும் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தங்கத்தை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

கூண்டு வைப்பு

இந்த நிலையில் இஞ்சிப்பாறை எஸ்டேட் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதை முன்னிட்டு கரடியை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என்று எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் விஜயகுமார் ஆணையாளர் பாலு ஆகியோர் முன்னிலையில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் இஞ்சிப் பாறை எஸ்டேட் பஸ் நிறுத்தம் பகுதியில் நிரந்தரமாக உயர் மின் கோபுர தெருவிளக்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதுவரை தற்காலிகமாக இரண்டு இடங்களில் தெருவிளக்கு அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.