கோவை கம்பன் கழகத்தின் 50-ம் ஆண்டு பொன் விழாவை யொட்டி 2 நாள் நிகழ்ச்சிகள் மணி மேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. கம்பன் கழக தலைவர் எஸ்.பதி, பொருளாளர் ஆர்.ஆர்.பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர். பொன் விழா சிறப்பு நூலை பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட மரபின் மைந்தன் முத்தையா பெற்றுக்கொண்டார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கம்பராமாயணம் தமிழ் மண்ணின் சிறப்பையும், அறத்தையும் எடுத்து கூறுவதில் நிகரில்லாத அளவுக்கு உள்ளது. காலத்தை கடந்து நிலைத்து நிற்பவற்றில் திருக்குறளுக்கு அடுத்ததாக கம்பராமாயணம் விளங்குகிறது. தமிழ்மொழி தான் ஞானத்தை அளிக்கும் உலகின் சிறந்த மொழியாக உள்ளது. அறச்சிந்தனையுடன் கூடிய வடிவு மிக முக்கியமானது. கம்பன் ஒரே படைப்பில் அனைத்தையும் கொண்டு வந்துள்ளார். அன்பையும், அறத்தையும் பின்னிப் பிணைந்து கம்பராமாயணம் இருப்பதாக கிருபானந்த வாரியார் கூறி உள்ளார்.
இதில் 6 காண்டங்களுடன் மொத்தம் 10,368 பாடல்கள் உள்ளன. மண், மொழி, கலாசாரம் அனைத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கம்பராமாயண பாடல்கள் உள்ளன. காலத்தால் அழிக்க முடியாத படைப்பாக கம்பராமாயணம் விளங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கி.வைத்தியநாதன், கம்பன் கழக துணைத்தலைவர் வி.செல்வபதி, க.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியும், மாலையில் சுகி சிவம் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றமும் நடைபெற்றது.