கோவை; கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று, கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும்போது, 24 மணி நேரத்துக்கு முன்னதாக, தகுதியான கால்நடை மருத்துவரிடம் கால்நடைகள் ஆரோக்கியமாக உள்ளது என, உடல் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
நோயுற்ற, உடல் ஊனமுற்ற, பார்வையற்ற, புதிதாக கன்று ஈன்ற, 72 மணி நேரத்திற்குள்ளாக கன்று ஈனும் நிலையிலுள்ள, கால்நடைகளை ஏற்றிச் செல்லக்கூடாது, சினையாக உள்ள கால்நடைகள் மற்றும் இளம் வயது கால்நடைகளையும், ஒன்றாக வாகனத்தில் ஏற்றிச் செல்லக்கூடாது.
142 இன்ச் உள்ள வாகனத்தில் கன்றுடன் 5 கால்நடைகளையும், கன்றில்லாமல், 6 கால்நடைகளையும் ஏற்றிச் செல்லலாம். கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும்பொழுது, குறிப்பிட்ட நேர இடைவெளியில், ஓய்வு அளித்து தண்ணீர், தீவனம் அளிக்க வேண்டும்.
கால்நடைகளை வாகனங்களில் காற்றோட்டமாகவும், சரியான இடைவெளியுடனும், ஏற்றிச் செல்ல வேண்டும். எவ்வித வதையும் செய்யவில்லை என, உரிமையாளர் போட்டோவுடன் கூடிய சான்று வழங்க வேண்டும்.
பராமரிக்க ஒரு உதவியாளர், மற்றும் முதலுதவி பெட்டி வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். தரைதளத்தில் 5-6 செ.மீ., அளவு வைக்கோல் நிரப்பியிருக்க வேண்டும். வாகனம் மிதமான வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.