தொண்டாமுத்தூர்; பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக கனிம வள கொள்ளை நடந்த கிராமங்களில், கனிமவளத்துறை குழுவினர், சர்வே செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில், சட்டவிரோதமாக மண் கொள்ளை மற்றும் சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகள், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தன.
இதுகுறித்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது, மண் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து சமர்ப்பிக்க, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கனிமவளத்துறை உதவி இயக்குனர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில், 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, சர்வே அறிக்கை மற்றும் ட்ரோன் வீடியோ சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, பேரூர் தாலுகாவிற்குட்பட்ட தொண்டாமுத்தூர், தேவராயபுரம், வெள்ளிமலைபட்டிணம், ஆலாந்துறை, கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில், மண் கொள்ளை நடந்த கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், தரிசு நிலங்கள் என, அனைத்து நிலங்களையும், கனிம வளத்துறை குழுவினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து, சர்வே செய்து வருகின்றனர்.
இக்குழுவினர், வரும் 23ம் தேதி, சர்வே அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின், மண் கொள்ளை நடந்த இடங்களில், ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து, வரும் 31ம் தேதிக்குள், வீடியோ பதிவை, கனிமவளத்துறை கமிஷனருக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.