‘கணக்கு புரியலீங்களே டீச்சர்!’ முன்னாள் மாணவரால் சிரிப்பு!

0
4

கோவை; சிங்காநல்லுார் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்(மேற்கு), 75 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், மீண்டும் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

1950 முதல் 1960ம் ஆண்டு வரை படித்த இம்மாணவர்கள் பலர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஆசிரியர்கள் என, அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

நேற்றைய சந்திப்பில் இவர்களில், 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது வகுப்புகளில் பின்பற்றப்படும் நடைமுறை போல், பள்ளி தலைமையாசிரியை ஜெயக்குமாரி, இன்றைய மாணவர்களாக ‘மாறிய’ மாணவர்களுக்கு, வருகை பதிவு எடுத்தார்.

தொடர்ந்து, ‘அம்மா’, ‘அப்பா’ என கரும்பலகையில் எழுதி, தமிழ் பாடம் நடத்தினார். ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு, ‘மாணவர்கள்’ கையை கட்டிக்கொண்டு பதில் அளித்தனர். இந்த அனுபவம், அவர்களை பழைய நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது.

கணித வகுப்பு எடுத்தபோது, ‘டீச்சர், கணக்கு ஒன்னும் புரிய மாட்டீங்குது’ என, கொங்கு தமிழில் ‘மாணவர்’ ஒருவர் பயந்தவாறு பதில் அளித்தார். அவரது பவ்யமான உடல் அசைவைக் கண்ட ஆசிரியர் உட்பட அனைவராலும், சிரிப்பை அடக்க முடியவில்லை.

நிறைவில், மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் வகுப்பறைகளில் அமர்ந்து, ‘இனியெல்லாம் இது மாதிரி எங்க கிடைக்கப்போகுது’ என்று, பழைய நினைவுகளை பகிர்ந்து பிரிந்தனர்.