‘கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை மாரடைப்பை வரவழைக்கும்

0
6

”சர்க்கரை பாதிப்பை கட்டுப்படுத்தவில்லை எனில், அது இதயத்தை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்தும்,” என்கிறார் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.

அவர் கூறியதாவது:

மாரடைப்பு ஏற்படும் முன், தோன்றும் அறிகுறிகள் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோன்றாது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்னரே சர்க்கரை நோயும், மாரடைப்பும் இணைந்து உயிரை போக்கி விடும். எனவே தான் மாரடைப்பை தசை வலி, வாய்வு பிடிப்பு, அல்சர், வைரஸ் என்று தவறாக அனுமானித்து, வீட்டிலேயே பலர் உயிரிழக்கின்றனர்.

இதோ ஒரு உதாரணம்…

சங்கர், 56, ஒரு அரசு அலுவலர். 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. மருந்து உட்கொள்வாரே தவிர, டாக்டரிடம் முறையாக பரிசோதனை, சிகிச்சை எடுப்பதில்லை. நேரமின்மை, வேலைப்பளு, உணவு கட்டுப்பாட்டின் வாயிலாக நோயை சரிசெய்யலாம் எனும் தவறான கருத்து உள்ளவர்.

ஒருநாள் நள்ளிரவு, சங்கருக்கு இடது தோளில் வலி ஏற்பட்டு, அதிகளவில் வியர்த்தது. மனைவியிடம் தோள்பட்டையைத் தேய்த்து விடச்சொன்னார். மனைவியோ மருத்துவமனைக்கு செல்ல அழைத்தார். ‘இது வெறும் கைக்குடைச்சல் தான்; விக்ஸ் தேய்த்தால் சரியாகி விடும். காலையில் பார்த்துக்கொள்ளலாம்’ என்றார் சங்கர்.

சிறிது நேரம் கழித்து, அவர் மனைவி எதேச்சையாக பார்க்கையில், சங்கர் சுயநினைவின்றி இருந்தார். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இ.சி.ஜி., பரிசோதனையில், மாரடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. 40 நிமிடங்கள் டாக்டர்கள் முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை. ஒரு மணி நேரம் முன்னதாக வந்திருந்தால் சங்கரை காப்பாற்றியிருக்கலாம்.

இதன் வாயிலாக, 30 – 40 சதவிகிதம் வரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வந்தாலும் நெஞ்சுவலி வராது.(சைலன்ட் ஹார்ட்அட்டாக்). இடது தோள்பட்டைக் குடைச்சல், இடது கை வலி, வியர்வை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, இ.சி.ஜி., பரிசோதனை செய்ய வேண்டும்.

அதிக வியர்வை, தலை சுற்றல், கழுத்துவலி, மேல்வயிறு வலி ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இதயத்தின் உள் சுவர் பகுதியில், மாரடைப்பு வந்தால் வயிற்று புண், வலி ஆகியவற்றுக்கு இருக்கும் அதே அறிகுறிகள் இருக்கும்.

எந்த வகையான நெஞ்சுவலி வந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்