கட்டில், பாய், தலையணையுடன் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேற சென்ற 400 பேர் கைது

0
123

கோவை,

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கை, மத்திய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் பலரை அலைக்கழிப்பதாக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து கோவை மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ரேஸ்கோர்சில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று கட்டில், பாய், தலையணை, குடம் உள்ளிட்ட பொருட்களுடன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் குடியேறும் போராட்டம் நடத்துவதற்காக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

இதற்கு மாநில செயலாளர் முகம்மது பயாஸ் தலைமை தாங்கினார். இதில், மாநில செயற்குழு உறுப் பினர் இப்ராகிம்பாஷா, மாவட்ட தலைவர் அன்வர் உசேன், செயலாளர் அப்பாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் முகம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகம்மது பயாஸ் கூறும் போது, ‘இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் வாலிபர்களை திட்டமிட்டு அலைக்கழிக்கிறார்கள். கோவையில் அப்துல்ஹக்கீம், அப்துல்ரசாக் ஆகிய 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. ஏற்காமல் சசிகுமார் கொலை வழக்கை மட்டும் விசாரணை நடத்துவது, மத்திய பாரதீய ஜனதா அரசின் எண்ணத்தை செயல்படுத்துவது போல் உள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம்’ என்றார்.

பின்னர் அவர்கள் கட்டில், பாய், தலையணையுடன் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். ரேஸ்கோர்ஸ் நுழைவு வாயிலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாய் மற்றும் கட்டில்களை ரோட்டில் போட்டு அதில் படுத்து கண்டன கோ‌ஷமிட்டனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளும் போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள், அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் போராட்டத்தால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.