கடை வீதியில் அலைமோதும் கூட்டம்-போலீசார் தீவிர கண்காணிப்பு

0
94

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் வாங்குவதற்கு கடை வீதியில் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் எடுக்கவும், நகைகள் மற்றும் இனிப்பு உள்பட பல்வேறு பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் கடை வீதி மற்றும் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் களைகட்டுகிறது. இதன் காரணமாக கடை வீதியில் இருசக்கர மற்றும் நான்கு சச்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடை வீதிக்கு செல்லும் சாலைகளின் சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. பொதுமக்கள் கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருட்டு செயல்களில் ஈடுபட கூடும் என்பதால் குற்ற பிரிவு போலீசார் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

போலீசார் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையின் போது குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி மெட்ராஸ் ரோடு சந்திப்பு, கடை வீதி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து போலீசார் பொதுமக்கள் மற்றும் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 6 போலீசார் சாதாரண உடையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இதை தவிர ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு குற்றச் செயல்கள் மற்றும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பழைய குற்றவாளிகளின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறது.

பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் அங்கு பணியில் இருக்கும் போலீசாரிடம் தெரிவிக்கலாம். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மர்ம நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.