கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவில் அருகில் உள்ள, அசோகா பிரேமா கல்யாண மண்டபத்தில், பழங்கால நாணயங்கள் கண்காட்சி நடக்கிறது.
சோழர்கள் கால நாணயங்கள், ரோமானிய நாணயங்கள், பல நாடுகளின் பணத்தாள்கள், வரலாற்று சின்னங்கள், பழங்கால பொருட்கள் என, ஏராளமான அரிய பொருட்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை பார்வையிட வந்திருந்த என்.ஜி.பி., கல்லுாரி மாணவி பவ்யா கூறுகையில், ”நான் ஸ்கூல் படிக்கும் போது காயின், ஸ்டாம்ப்ஸ் எல்லாம் சேகரித்து வைத்து இருந்தேன். இப்போதும் ஆர்வம் குறையவில்லை. இந்த கண்காட்சியில், நிறைய கலெக்சன் உள்ளது,” என்றார்.
மாணவி பிரின்சி கூறுகையில், ”இந்த கண்காட்சியில் உள்ள பழங்கால நாணயங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. குறிப்பாக சோழர்கள், பாண்டியர்கள் கால நாணயங்களை பார்க்கும்போது, அந்த காலத்துக்கு பின் நோக்கி பயணிக்கும் அனுபவம் கிடைக்கிறது. பிரிட்டிஷ் கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், ஸ்டாம்ப்ஸ் எல்லாம், நான் இங்குதான் பார்க்கிறேன்,” என்றார்.
நாணயங்கள், வெளிநாட்டு ஸ்டாம்ப்ஸ், கவர்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், பழங்கால பொருட்கள் சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்த கண்காட்சி செம வேட்டை. காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, இன்றுடன் முடிவடைகிறது.
மொபைல் போனை துாக்கி போட்டு விட்டு, இன்றைய விடுமுறையை, இந்த கண்காட்சியில் கழிக்கலாமே!