கோவை வழியாக தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. இதில் மாநகர பகுதியில் குடியிருப்பு வழியாக தண்டவாளம் செல்கிறது. அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்க கோவை மற்றும் போத்தனூர் ரெயில்வே போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் ரெயிலில் சிறுவர்கள் கல் எறிவதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
கோவையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 166 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் கோவை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 106 பேர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளனர். இதில் 96 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆகும். ேமலும் 19 பேர் அடையாளம் தெரியவில்லை. அதுபோன்று போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 60 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதில் 54 பேர் ஆண்களும், 6 பேர் பெண்களும் ஆவார்கள். மேலும் 5 பேர் அடையாளம் தெரியவில்லை. தண்டவாளத்தை கடந்து செல்வது, ரெயில் மீது கற்கள் வீசுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.