கோவையில் செல்போன் விற்பனை செய்வதாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பி.எஸ்.என்.எல். ஊழியர்
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் நடராஜ மூர்த்தி(வயது 59). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருக்கு புதிதாக செல்போன் வாங்க ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் இணையதளத்தில் செல்போன் குறித்து அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி மற்றும் இணையதள லிங்க் வந்தது. அதில் குறைந்த விலையில் செல்போன் வாங்க வேண்டும் என்றால் உடனடியாக இந்த இணையதள லிங்குக்குள் செல்லலாம் என்று குறிப்பிட்டு இருந்தது.
ரூ.4 ஆயிரத்துக்கு செல்போன்
உடனே நடராஜ மூர்த்தி அந்த லிங்குக்குள் சென்றார். அதில் ஏராளமான செல்போன்களும் அதன் விலைகள் குறித்த விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தன. அதில் பல்வேறு வகையான செல்போன்களை பார்த்த நடராஜ மூர்த்திக்கு, ரூ.4 ஆயிரத்துக்கு இருந்த ஒரு செல்போன் மிகவும் பிடித்து விட்டது. உடனடியாக அந்த செல்போனை ஆர்டர் செய்த அவர், அதற்கான பணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தினார். அப்போது 5 நாட்களுக்குள் செல்போன் வீட்டுக்கு வந்து விடும் என்று குறுஞ்செய்தி அவரது செல்போன் எண்ணுக்கு வந்தது.
போலீசார் விசாரணை
ஆனால் ஒரு வாரம் ஆகியும் செல்போன் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடராஜ மூர்த்தி, அந்த லிங்க் தொடர்பாக விசாரித்தபோது, அது போலியான லிங்க் என்பதும், பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் போலியான லிங்க் அனுப்பி ரூ.4 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.