ஓம் சக்தி… பராசக்தி கோஷமிட்டு பக்தர்கள் பரவசம் : மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

0
13

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. கடந்த மாதம், 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் மற்ற சன்னதிகளுக்கு பாலாலயம் நடந்தது.

இதையடுத்து, கும்பாபிேஷக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. கடந்த, 9ம் தேதி யாக பூஜைகள் துவங்கப்பட்டன. நேற்று காலை, 7:35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, காலை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

அதன்பின், மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், இரண்டாம் ஸ்தானீகம் ராஜா பட்டர் தலைமையில், சிவாச்சாரியர்கள், யாக சாலையில் இருந்து, விமான கோபுரங்களுக்கு கலசங்களை கொண்டு வந்தனர். அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி பச்சை கொடி அசைக்க, சிவாச்சாரியர்கள், காலை, 9:30 மணிக்கு மாசாணியம்மன் கோபுரத்துக்கு கலசங்களில் இருந்து புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெற்றன. பக்தர்கள், ‘ஓம் சக்தி… பராசக்தி, மாசாணி தாயே’ என கோஷமிட்டு வணங்கினர்.

எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, கந்தசாமி, எம்.பி., ஈஸ்வரசாமி, கோவை முன்னாள் மேயர் வேலுச்சாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன்,ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் அறங்காவலர்கள், ஆதீனங் கள், முக்கிய பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.