ஓட்டையாகி கிடக்குது தடுப்பணை ஷட்டர்

0
8

கோவை, பிப்.27: கோவை நகரில் நொய்யல் நீர் ஆதார குளங்கள், தடுப்பணை, வாய்க்கால் ஷட்டர்கள் பழுதாகி கிடக்கிறது. குறிப்பாக நொய்யல் ஆற்றில் இருந்து குறிச்சி, வெள்ளலூர் குளத்திற்கு பாயும் ராஜ வாய்க்கால் ஷட்டர்கள், குனியமுத்தூர் செங்குளத்தின் ஷட்டர், சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை ஷட்டர் பழுதாகி கிடக்கிறது. உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தின் ஷட்டர்களும் பராமரிக்கப்படவில்லை. ஓட்டையாகி கிடக்கும் ஷட்டர் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. வாய்க்கால், தடுப்பணை ஷட்டர் பகுதியில் பிளாஸ்டிக், குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

இவற்றை பல மாதங்களாக அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். சில இடங்களில் சேறு, சகதி, மண் குவியல் காணப்படுகிறது. புதர் செடிகளும், இறைச்சி கழிவுகளையும் இந்த பகுதியில் கொட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் குளம் குட்டை, வாய்க்கால், தடுப்பணை, ஷட்டர், வடிகால் சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளை சரியாக ெசய்யாமல் இருப்பதால், மழை காலங்களில் வெள்ளம் பாயும் போது அதை தடுக்க முடியாத சூழல் ஏற்படும். சில தடுப்பணைகளில் ஷட்டர் பெயரளவிற்கு கூட செயல்படுவதில்லை. ஷட்டர்கள் திறக்க முடியாத அளவிற்கு பழுதாகி காட்சி பொருளாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதை சரி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.