ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது! ஜி.எஸ்.டி. , எண் -வணிக மின் இணைப்புகள் ஆய்வு; சொத்து வரி சீராய்வு; தொழில்துறையினர் அதிர்ச்சி

0
17

கோவை; குடியிருப்புகளுக்கு பெறப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., எண் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, கோவை மாநகராட்சி பகுதியில் ஆய்வு செய்யப்படுகின்றன. இது, சிறு குறு தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கோவை மாநகராட்சி பகுதியில், ஐந்து லட்சத்து, 84 ஆயிரத்து, 450 வரி விதிப்புகள் உள்ளன. நடப்பு நிதியாண்டில் (2024-25) ரூ.457.10 கோடி, கடந்த நிதியாண்டு (2023-24) நிலுவை ரூ.121.70 கோடி என, மொத்தமாக ரூ.578.80 கோடி வசூலிக்க வேண்டும். இதுவரை ரூ.243.31 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது

வரி வசூலர்கள் கள ஆய்வு செய்தபோது, ஓட்டு கட்டடங்களாக இருந்த சில குடியிருப்புகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

சில இடங்களில் கீழ்த்தளத்தில் கடைகள், மேல்தளத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி பதிவேட்டில் வீட்டுக்கான சொத்து வரியே செலுத்துவது கண்டறியப்பட்டது. அதனால், ‘டிரோன்’ மூலமாக ஆய்வு துவக்கப்பட்டது. வணிக பகுதிகள் அதிகமுள்ள, 40 வார்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டடமும் மறுஅளவீடு செய்யப்படுகிறது.

கூடுதல் பரப்பு கட்டியிருந்தாலோ அல்லது கட்டட வடிவமைப்பை மாற்றியிருந்தாலோ, மாநகராட்சி பில் கலெக்டர்கள் நேரில் சென்று அளவீடு செய்கின்றனர். இவ்வகையில் மட்டும் நடப்பு நிதியாண்டில், 15-20 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இத்தகைய ஆய்வில், 10 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாத, வணிக கட்டடம் கண்டறியப்பட்டதால், இப்பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக, குடியிருப்புகளுக்கு வணிக பயன்பாட்டு மின் இணைப்புகள் பெற்றவர்கள் மற்றும் குடியிருப்பு முகவரிக்கு ஜி.எஸ்.டி., எண் பெற்றிருப்பவர்கள் என, 30 ஆயிரம் வரி விதிப்புதாரர்கள் பட்டியல் மத்திய – மாநில அரசுகளால் வழங்கப்பட்டு இருக்கிறது.

வீடுகளுக்கு வணிக பயன்பாட்டு மின் இணைப்பு எதற்காக பெறப்பட்டு இருக்கிறது என நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்; வணிக நிறுவனம் செயல்பட்டால், சொத்து வரியை வணிக பயன்பாட்டுக்கான வரியாக மாற்ற வேண்டும்; அவர்கள் செய்யும் தொழிலுக்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதேபோல், குடியிருப்பு முகவரி குறிப்பிட்டு ஜி.எஸ்.டி., எண் பெற்றவர்களின் கட்டடங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். குடியிருப்பு இருக்கிறதா; தொழில் நடைபெறுகிறதா என்பதை நேரில் உறுதிப்படுத்த வேண்டும். வணிகப் பயன்பாடாக இருந்தால் சொத்து வரி மாற்றம்; தொழில் உரிமம் வழங்க வேண்டும்.

குடியிருப்பாகவே இருக்கிறதென்றால், சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நேரில் சென்று, முறைகேடு ஏதும் நடக்கிறதா என ஆய்வு செய்வர்.

ஜி.எஸ்.டி., எண் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் மூலம் குடியிருப்புகளை கள ஆய்வு செய்த வகையில், கோவை மாநகராட்சிக்கு இதுவரை, 1.5 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., எண் மூலமாக ஆய்வு செய்வது, சிறு குறு தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இத்தகைய ஆய்வை கைவிட வேண்டுமென, மாநகராட்சி நிர்வாகத்துக்கு கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ”குடியிருப்புகளுக்கு பெறப்பட்டுள்ள வணிக பயன்பாட்டு மின் இணைப்பு மற்றும் ஜி.எஸ்.டி., எண்கள் என, 30 ஆயிரம் வரி விதிப்புதாரர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை கள ஆய்வு செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் இத்தகைய ஆய்வு நடக்கிறது” என்றார்.