கோவை; கார்த்திகை மாதத்தில் வரும் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று, திருக்கார்த்திகை தீபத்திருநாள். பெரும்பாலான சிவாலயங்கள் மற்றும் முருகன் கோவில்களில், ஒரு வார விழாவாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
விழா நாட்களில் பஞ்சமூர்த்திகள் பவனி வருவதும், சொக்கப்பனை கொளுத்துவதும், மகாதீபம் ஏற்படுவதும் வழக்கம். கோவை கோனியம்மன் கோவிலிலும், கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவிலிலும், நேற்று இரவு தீபஸ்தம்பத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பக்தர்கள் ‘ஓம்நமசிவாய’ கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில், கருவறையின் வெளிப்பகுதியில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மருதமலை சுப்ரமணியன் சுவாமி கோவில், மதுக்கரை தர்மலிங்கேஸ்வர சுவாமி கோவில்கள், தண்டுமாரியம்மன் கோவில், சுக்ரவார்பேட்டை பாலதண்டாயுதபானி சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.