பெ.நா.பாளையம், ;பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம், பூச்சியூர், தெற்குபாளையம், தேவையம் பாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை ஆண் யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கூடலுார் கவுண்டம்பாளையம், பாரதி நகர், கட்டாஞ்சி மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு செல்வோர் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்கும் படியும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், வீடுகளுக்கு முன்பாக கால்நடை தீவனங்கள், அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைப்பதை தவிர்க்கும்படியும், யானை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடும் வனத்துறையினருக்கு, பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.