கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 37). இவர் செட்டிப்பாளையம் பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். கடந்த 18-ந் தேதி இவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பரந்தாமன், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலுக்கு முன்பு பைனான்ஸ் நிறுவனம் நடத்தி உள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவருக்கும் சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் இந்த கொலையில் 15 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், பீளமேட்டை சேர்ந்த முத்துரவி என்ற வியாசர்பாடி ரவி மற்றும் அவருடைய உறவினர்களான மருபாண்டி, நவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட போட்டியில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய 2 கார்கள் மற்றும் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட பரந்தாமனுக்கும், கைதான முத்துரவிக்கும் கார் வாங்கி விற்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. முத்துரவி பழைய கார்களை வாங்க வாடிக்கையாளரிடம் பேசிவிட்டு வந்தால், அடுத்தநாளே பரந்தாமன் அந்த காரை வாங்கி விற்பனைக்கு தயார் செய்து வந்துள்ளார். இதனால் தொழிலில் நஷ்டம் அடைந்த முத்துரவிக்கு பரந்தாமன் மீது விரோதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மிரட்டிக்கொண்டனர்.
பரந்தாமனுக்கு மிரட்டல் இருந்ததால் அவரும் உஷாராகவே இருந்துள்ளார். அந்த ஒர்க்ஷாப்புக்கு யாராவது வந்தால் வெளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அவருடைய செல்போனுக்கு ‘பீப்’ ஒலி வரும் என்றும் உடனே யார் வருகிறார்கள் என்று பரந்தாமன் பார்க்கும் வகையிலும் முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் உஷாராக இருந்ததையும் மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை நடந்த போது அந்த ஒர்க்ஷாப்பில் 3 பேர் இருந்துள்ளனர். ஆனால் கொலையாளிகள் உள்ளே நுழைந்ததும் அந்த 3 பேரையும் ஒரு அறையில் தள்ளி உள்ளனர். மேலும், கூலிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து உள்ளதின் மூலம் அந்த ஒர்க்ஷாப்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்து உள்ளது தெரியவருகிறது. ஒர்க்ஷாப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கொலையாளிகள் அடித்து உடைத்ததால் செல்போன் டிராக்கிங் மூலம் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.