உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவையில் ஒரே இடத்தில் 5,386 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்று உலக சாதனை படைத்தனர்.
உலக முதலுதவி தினம்
உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மைதானத்தில் மாவட்ட நிர்வாகமும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து மாபெரும் உலக சாதனையாக பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்ற முதலுதவி விழிப்புணர்வு செய்முறை பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழம், தனியார் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 5,386 மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் கலந்துகொண்டனர்.
இந்த முதலுதவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மயக்கத்தில் இருப்பவரை உடனடியாக மீட்டு அடிப்படை முதலுதவி சிகிச்சைகான பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ- மாணவிகளை நிழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர பஸ் வசதிகள் ஏற்பாடு, தேவையான எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக சாதனை
கோவை மாவட்டத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 5,386 மாணவ-மாணவிகள் பேசிக் லைப் சப்போர்ட் டெமான்ஸ்ட்ரெசன் மற்றும் பயிற்சியை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டனர். 49 கல்வி நிறுவனங்கள் இதில் பங்குபெற்றன.
ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இது உலக சாதனை முயற்சியாக பதிவு பெற்று உள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கும், தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் இந்த விருது வழங்கப்படும். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியும் ஒரே இடத்தில் 5,386 மாணவ- மாணவிகள் எடுத்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணை வேந்தர் கீதா லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் பூமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.