அன்னூர்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அன்னூர் வார சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது
அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில், சனிதோறும், ஆட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்றைய சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சத்தி, மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு வகை ஆடுகளை, விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஆடுகள் வாங்குவதற்கு, அதிக அளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர். ஆட்டுக்குட்டிகள் குறைந்தது, 1500 முதல் 5000 ரூபாய் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் 6,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘வழக்கத்தை விட ஆடு வரத்தும், விற்பனையும் அதிகமாக இருந்தன. ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. விலையில் பெரிய மாற்றம் இல்லை’ என்றனர்.