‘ஒரு கிராமம் – ஒரு அரச மரம் ‘ திட்டம் துவக்கம் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு

0
6

தொண்டாமுத்தூர்: பேரூரில், காவேரி கூக் குரல் இயக்கம் மற்றும் நொய்யல் ஆறு அறக்கட்டளை சார்பில், கிராமங்கள் தோறும், அரச மரம் நடும் திட்டம் துவங்கப்பட்டது.

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் நொய்யல் ஆறு அறக்கட்டளை சார்பில், பேரூர் ஆதினம் ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புவி வெப்பமயமாதலை தடுக்க, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் அரச மரத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்காக, ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ என்ற திட்டத்தை, முதற்கட்டமாக கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவங்க திட்டமிட்டனர். இத்திட்டத்தின் துவக்க விழா, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது.

கல்லூரி வளாகத்தில், அரசமரம் மற்றும் வேப்ப மரக்கன்றுகளை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் சிறுதுளி அமைப்பு அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர், நடவு செய்து, ‘ஒரு கிராமம் ஒரு அரசமரம்’ திட்டத்தை துவக்கி வைத்தனர்.

விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில், ”அரச மரங்கள் அதிக அளவில் ஆக்சிஜன் அளிப்பதோடு, மகப்பேறு பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது. இன்று அவை பல இடங்களில் வெட்டப்பட்டு அருகி வருகின்றன.

”இத்திட்டத்தில், அரச மரக்கன்றுகள் நடுவதோடு நிற்காமல், அவற்றை பராமரிக்க வட்டம், மாவட்டம், வட்டார அளவில் குழுக்கள் உருவாக்கப்படும்,” என்றார்.

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, நொய்யல் ஆறு அறக்கட்டளை அறங்காவலர் ஆறுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் அஜித் சைதன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.