ஒரு கால பூஜை கோவிலுக்கு இலவச மின்சாரம்; கிராம கோவில் பூசாரிகள் அரசுக்கு வலியுறுத்தல்

0
5

கோவை: ‘தமிழகம் முழுக்க உள்ள, ஒரு கால பூஜை நடைபெறும் கிராமக்கோவில்களுக்கு கட்டணமில்லா இலவச மின்சாரம் வழங்க வேண்டும்’ என்று, கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை, மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ராமநாதபுரம் சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில், மாநில பொதுசெயலாளர் சோமசுந்தரம் பேசியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலின் போது, கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் ஒரு கால பூஜை நடைபெறும் கிராம கோவில்களில், நன்செய் மற்றும் புன் செய் நிலம் ஏராளம் உள்ளன.

அவற்றின் வாயிலாக கோவில்களுக்கு, அன்றாடம் பூஜை செய்வதற்கான செலவு தொகையும் பூசாரிகளுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்காமலிருப்பது ஏமாற்றம் தருகிறது.

பள்ளிவாசல்களில் பணிபுரிவோருக்கும், சர்ச் நிர்வாகிகளுக்கும் அரசு நிதியிலிருந்து ஊதியம் வழங்குவது போல், கோவில்களின் ஏராளமான சொத்துக்களை வைத்துக்கொண்டு, அங்குள்ள பூசாரிகளுக்கு, சம்பளமும், ஓய்வூதியமும் தர மறுப்பது மிகப்பெரிய துரோகம்.

பட்டியல் இன மக்கள் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்வதற்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்யப்படுகிறது.

பட்டியலின மக்கள் கோவில் கட்டுவதற்கு உண்டான, முழு தொகையும் எந்தவிதமான பிடித்தம் இல்லாமல் அரசு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்தப்படும்.

அனைத்து கிராமக்கோவில் பூசாரிகளுக்கும், ஓய்வூதியமாக 4,000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துதல், கிராம கோவில்களுக்கு இலவச மின் வசதியை ஏற்படுத்துதல், ஓய்வூதியம் பெரும் பூசாரிகள் இறந்தால், அவரது ஓய்வூதியத்தை அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் விஷ்ணுகணேஷ்ராஜா, இணை அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்ரீராஜதேவேந்திர சுவாமிகள், முத்துசிவராமசுவாமிகள் ஆசியுரை நிகழ்த்தினர். மாநகர மாவட்ட அமைப்பாளர் திருஞானச்சம்பந்தம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார்.