ஒன்பது நாட்களும் இனி கொண்டாட்டம்:கோவை விழா’வுக்காக நகரம் முழுக்க விழாக்கோலம்;

0
26

கோவை: கோவை விழாவின் 17வது பதிப்பு, இன்று துவங்குகிறது. விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடப்பதால், நகரமே கொண்டாட்ட மனநிலைக்கு மாறியுள்ளது.

கோவையின் செறிவான பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்’கோவை விழா’ கொண்டாடப்படுகிறது. இதன் 17வது பதிப்பு, இன்று துவங்கி, வரும் டிச.,1ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

விழாவின் துவக்க நிகழ்வு, கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 5:00 மணிக்குத் துவங்குகிறது. துவக்க நிகழ்வின் சிறப்பம்சமாக பாடகி ஜொனிடா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி, இன்று காலை 9:30 மணிக்கு ரேஸ்கோர்ஸில், 50க்கும் மேற்பட்ட புராதன கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு நடக்கிறது. ‘லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டர்’ வளாகத்தில் கார்கள் கண்காட்சிக்கு நிறுத்தப்படும். காலை 6:00 மணிக்கு யோகா யாத்ரா, 7:00 மணிக்கு பறவை மற்றும் பட்டாம்பூச்சி நடை எனத் தொடங்கி நாள் முழுதும் குழந்தைகளுக்கான கால்பந்து, ஓவியப் போட்டிகள், வாலிபால் போட்டி, கொங்கு உணவுத் திருவிழா என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாளை மாலை பெரியகுளத்தில் இசை நிகழ்ச்சி, கிராஸ்கட் ரோட்டில், கலாசார அணிவகுப்பு உட்பட 12க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

கோவை விழாவை முன்னிட்டு, ஒன்பது நாட்களும் 13 மிக முக்கியமான பிரம்மாண்ட நிகழ்வுகளும், சுமார் 200 பிற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. நகரின் எந்தவொரு பகுதியில் இருப்பவர்களும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், இசைக் கச்சேரிகள், ஆர்ட் ஸ்ட்ரீட், உணவு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகள், குதிரைப் பந்தயம் என, கொண்டாட்டத்துக்கு குறைவில்லாமல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கோவை விழாவில் அனைவரின் எதிர்பார்ப்பான டபுள் டக்கர் பஸ்கள் இந்த ஆண்டும் உண்டு. வ.உ.சி., பூங்காவில் இருந்து இரண்டு டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது அவசியம்.

வாங்க மாரத்தான் ஓடலாம்!

நாளை காலை, 5:00 மணிக்கு வ.உ.சி., பூங்கா அருகில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாரத்தான் நடக்கிறது. மாரத்தான் போட்டியைப் பொறுத்தவரை, ‘போதைப்பொருளுக்கு நோ’ என்ற கருப்பொருளின் கீழ் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள், போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழி எடுப்பர். 2.5 கி.மீ., பேமிலி ரன், 2.5 கி.மீ., வாக்கத்தான், 5 கி.மீ., 10 கி.மீ., அல்லது 15 கி.மீ., டைம்ட் ரன்னில் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு ரூ.3.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. மாரத்தானை ‘தினமலர்’ நாளிதழ் இணைந்து வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு 96005 74888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கோவை விழாவை கோலமிட்டுக் கொண்டாட அழைக்கிறது நம்ம ‘தினமலர்’. இன்று மாலை உங்கள் வீட்டு வாசலில் அழகாக ஒரு கோலமிடுங்கள். அதன் நடுவில் விளக்கேற்றுங்கள். ஊரே ஜொலிக்கட்டும். இந்தக் கோலத்தை அப்படியே படம்பிடித்து, நம்ம தினமலருக்கு 95666 97267 என்ற டெலிகிராம் எண்ணுக்கு அனுப்பி வைங்க. வாங்க, கோவையின் பெருமையைக் கொண்டாடுவோம்.