ஐ.டி., நிறுவன ஊழியர் உட்பட மூவர் கைது : பீகாரில் இருந்து துப்பாக்கி வாங்கி வந்து விற்க முயற்சி

0
21

கோவை; பீகாரில் இருந்து துப்பாக்கி வாங்கி வந்து, கோவையில் விற்க முயற்சித்த ஐ.டி., நிறுவன ஊழியர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு, 22; ஐ.டி., ஊழியர். இவரது நண்பர்கள் காளப்பட்டி காபி கடை பகுதியைச் சேர்ந்த ஆக்டிங் டிரைவர் ஹரிஸ்ரீ, 23 மற்றும் ஹரிஸ்ரீ வீட்டில் சமையல் வேலை செய்து வந்த பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த குந்தன்ராய், 22.

மூவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அவ்வாறு மது அருந்தும் போது குந்தன்ராய், ”பீகார் மாநிலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் கிடைக்கும். கள்ளத்தனமாக ஏராளமானோர் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். விலை ரூ.1 லட்சம் மட்டுமே. நாமும் வாங்கி விற்பனை செய்யலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூவரும் துப்பாக்கி வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டனர். இத்தகவல் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் ஒருவரை தயார் செய்து, மணிகண்டபிரபுவிடம் பேச வைத்தனர்.

அந்நபர் மணிகண்டபிரபுவை தொடர்பு கொண்டு, ‘நாட்டுத்துப்பாக்கி வேண்டும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தருகிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த வாரம் மணிகண்ட பிரபு, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து குந்தன்ராய், ஹரிஸ்ரீ ஆகிய இருவரையும், துப்பாக்கி வாங்க பீகார் மாநிலம் பாட்னாவுக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்ற இருவரும், சட்ட விரோதமாக ஆயுதம் விற்பனை செய்யும் இஸ்மாயில் என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை வாங்கி வந்தனர். சனிக்கிழமை இரவு, இருவரும் ரயில் வாயிலாக கோவை வந்தனர்.

இருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி., பத்ரிநாரயணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மணிகண்டபிரபுவையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், மூன்று மொபைல்போன்கள், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.