ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக கூறி ஐ.டி. ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஐ.டி. ஊழியர்
கோவையை அடுத்த வெள்ளலூர் எல்.ஜி.நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் இணையதளத்தை பார்த்தபோது அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்தது.
உடனே அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர்கள், நாங்கள் ஒரு லிங்க் அனுப்பி வைக்கிறோம். அதன் மூலம் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள், ரூ.600 முதலீடு செய்தால் லாபம், வட்டி ஆகியவை சேர்த்து சில மணி நேரத்தில் ரூ.1000 கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.
ரூ.7 லட்சம் மோசடி
இதை தொடர்ந்து அவர் ரூ.600 முதலீடு செய்தார். உடனே சில மணி நேரத்தில் ரூ.1000 கிடைத்து. அதன் பின்னர் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தார். இதைத்தொடர்ந்து ரூ.8 ஆயிரம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நிஷாந்த் சிறிது சிறிதாக கடந்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை ரூ.7 லட்சத்து 11 ஆயிரம் முதலீடு செய்தார்.
ஆனால் அதற்கான கூடுதல் வட்டியோ, லாபமோ கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்ட இருந்தது. இதையடுத்து அவர் தான் முதலீடு செய்த நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். அதிலும் எவ்வித பதிலும் இல்லை.
போலீசார் விசாரணை
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நிஷாந்த், இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ஆன்லைனில் கூடுதல் வட்டியோ, கூடுதல் லாபமோ தருவதாக கூறி யாராவது பணம் அனுப்ப சொன்னால் யாரும் அனுப்ப வேண்டாம். முதலில் சிறிய தொகை கொடுத்துவிட்டு, பின்னர் அதிகமான தொகையை நம்மிடம் இருந்து பெற்றுக்கொண்டு மோசடி செய்து விடுவார்கள். எனவே இதில் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றனர்.