ஐந்து நாட்களில் 100 மரங்கள் வெட்டி அகற்றம் மறுநடவு உறுதியை மறந்த அதிகாரிகள்

0
7

அன்னுார் : ஐந்து நாட்களில் கஞ்சப்பள்ளி பகுதியில், 100 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மறு நடவு செய்யப்படும் என அளிக்கப்பட்ட உறுதி நிறைவேறவில்லை என புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் துவங்கி, நம்பியாம்பாளையம், கருவலுார், கஞ்சப்பள்ளி, அன்னுார், பொகலுார், குமரன் குன்று வழியாக மேட்டுப்பாளையம் வரை உள்ள இருவழிச் சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப் படுத்தும் பணி துவங்கி உள்ளது. 250 கோடி ரூபாயில் இப்பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக 1,400 மரங்கள் வெட்டி அகற்றப்படும். வாய்ப்புள்ள மரங்கள் மறு நடவு செய்யப்படும். வெட்டி அகற்றப்படும் மரங்களுக்கு 10 மடங்கு மரங்கள் வேறு இடங்களில் நடப்படும் என நெடுஞ்சாலை துறை உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி கோவை மாவட்டத்தின் கிழக்கு எல்லை பகுதியான கஞ்சப்பள்ளி பிரிவு, ஊத்துப்பாளையம், நீலகண்டன் புதுார் பகுதியில் மரங்கள் வெட்டும் பணி துவங்கியது. ஐந்தே நாட்களில் 100 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இது குறித்து கஞ்சப்பள்ளி மக்கள் கூறுகையில், ‘புளியமரம் வேம்பு, புங்கன், வாகை என பல்வேறு வகையைச் சேர்ந்த 100 மரங்களை வெட்டியுள்ளனர்.

இதில் வாய்ப்புள்ள மரங்களை மறு நடவு செய்வோம் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.

ஒரு மரம் கூட மறு நடவு செய்ய ஏற்பாடு செய்யவில்லை. சாலையின் இருபுறமும் 20 இடைவெளியில் நிழல் தந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தி வந்த மரங்களை கண்மூடித்தனமாக வெட்டி அகற்றி வருகின்றனர்.

குறிப்பாக கஞ்சப்பள்ளி பிரிவில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டி அகற்ற முயற்சிக்கின்றனர். இந்த மரத்தை மறு நடவு செய்யாவிட்டால் அவிநாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.