கோவை; வரும் ஜன.,14 முதல் ஐதராபாத் – கோவை இடையே, தனது ஐந்தாவது சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம், பேங்காக், துபாய், தமாம், ஜெட்டா, குவைத், மஸ்கட், ரசல் கைமா ஆகிய எட்டு வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. உள்நாட்டில், 41 நகரங்களுக்கு இணைப்பு சேவையை வழங்குகிறது.
இந்நிலையில் தற்போது, ஐதராபாத் – கோவை இடையே, மேலும் ஒரு விமான சேவையை வழங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, வரும் ஜன., 14ம் தேதி முதல், ஐதராபாத் – கோவை – ஐதராபாத் விமான சேவைகள் துவங்கப்பட உள்ளன. இதன்படி, ஐதராபாத்தில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:35 மணிக்கு கோவை வந்தடையும். கோவையிலிருந்து காலை 9:10 மணிக்கு புறப்படும் விமானம், ஐதராபாத்துக்கு காலை 11:00 மணிக்கு சென்றடையும்.
ஏற்கனவே இண்டிகோ நிறுவனம், ஐதராபாத்துக்கு நான்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. ஐந்தாவதாக துவங்கப்படும், விமான சேவையின் வாயிலாக, கோவை – ஐதராபாத் இடையே தினமும், 13 ஆயிரம் பயணிகள் பயணிப்பர்.
இது கோவையிலிருந்து சென்னை, மும்பை விமான சேவைகளுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது பரபரப்பான வழித்தடமாக இருக்கும்.