கோவை: பெண்கள் தனியாக உள்ள கடைகளை குறி வைத்து, திருட்டு அரங்கேறி வருகிறது.
கோவை வடவள்ளி அடுத்த கல்வீரம்பாளையம் அருகே உள்ள பாரதி கார்டனை சேர்ந்தவர் ராமசாமி, 62. இவர் கணுவாய் நவாவூர் பகுதியில், பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமசாமி, வெளியில் சென்றிருந்தார். கடையில் அவரது மனைவி இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், டிபன் பாக்ஸ் மற்றும் விளக்குமாறு வேண்டும் என கேட்டார். அவர் கடைக்குள் சென்று இரண்டையும் எடுத்து வந்தார்.
ஆனால் அந்த வாலிபர், அவர் வருவதற்குள் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் அடங்கிய பணப்பையை திருடிச் சென்றார். ராமசாமி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார்.
* சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம் விளாங்குறிச்சி ரோட்டில் எண்ணெய் கடை நடத்தி வருபவர் ரேவதி, 52. இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், 8 லிட்டர் கடலை எண்ணெய் வேண்டும் என கேட்டுள்ளார். ரேவதி எண்ணெய் எடுக்க உள்ளே சென்ற நேரத்தில், அந்த வாலிபர் அங்கு இருந்த மொபைல் போனை திருடி சென்றார். சரவணம்பட்டி போலீசில் ரேவதி புகார் அளித்தார்.
* துடியலுார், ஜி.என்., மில், சுப்பிரமணியம் பாளையம், சூர்யா நகரை சேர்ந்தவர் லட்சுமி, 50. இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், அரிசி கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், அரிசி வாங்குவது போல் நடித்து அங்கிருந்த மொபைல் போனை திருடிச் சென்றார். லட்சுமி துடியலுார் போலீசில் புகார் அளித்தார்.
* கணபதி அடுத்த சின்ன வேடம்பட்டி, சக்தி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராணி, 68. இவர் கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்த போது வாலிபர் ஒருவர் வந்தார். அவர், ஜெயராணியிடம் பால் பாக்கெட் வேண்டும் என கேட்டுள்ளார். அவர் கடைக்குள் செல்ல முயன்றபோது, அந்த வாலிபர் ஜெயராணி கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றார். ஜெயராணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த நான்கு புகாரின் பேரில், அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிந்து, கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் வடவள்ளி ராமசாமியின் பாத்திர கடை, சரவணம்பட்டி ரேவதி கடையில் பணம் மற்றும் மொபைல் போனை திருடியது, கலிக்கநாயக்கன் பாளையம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சங்கரநாராயணன், 32 என்பது தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப் டாப், மொபைல் போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் அவர் மீது சரவணம்பட்டி, துடியலுார் உட்பட போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மற்ற கடைகளிலும் திருட்டில் ஈடுபட்டது சங்கரநாராயணன் தானா அல்லது வேறு யாராவதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மளிகை கடைகள் மற்றும் சிறிய கடைகளை, அதுவும் பெண்கள் தனியாக வியாபாரத்தை கவனித்து வரும் கடைகளை குறி வைத்து, நுாதன முறையில் நடந்து வரும் திருட்டு சம்பவங்கள், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.