கோவை; தடகளம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டச்சத்து தேவைக்காக மாத ஊக்கத்தொகை வழங்குவதுபோல், இதர சங்கங்களும் முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது, விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காகவும், விளையாட்டு தொடர்பான அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.
சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதுடன், மாவட்ட மற்றும் மாநில அளவில், விளையாட்டு தேர்வு சோதனைகள் நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு விளையாட்டு விடுதிகளில், பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தவிர, வாலிபால், பேட்மின்டன், கபடி, கூடைப்பந்து, தடகளம் என, 30க்கும் மேற்பட்ட சங்கங்களும் வீரர், வீராங்கனைகளை வழிநடத்தி வருகின்றன. சில சங்கங்கள் சிறந்த வீரர்களுக்கு மாதம்தோறும், ஊட்டச்சத்து தேவைக்காக ஊக்கத்தொகையும் வழங்கி வருகின்றன.
ஏழ்மையுடன் போட்டி
கடந்த மாதம் மாநில அளவிலான தடகள போட்டி, ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. இதில், சங்கம் சார்பில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தலா நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் தோறும் ரூ.6,000 வீதம் ஓராண்டுக்கு ஊட்டச்சத்து தேவைக்காக, ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.
இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனையும் ஒருவர். இந்நிலையில் இதர சங்கங்களிடமும் இதுபோன்ற ஊக்கத்தொகையை வீரர், வீராங்கனைகள் எதிர்பார்த்துள்ளனர். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்துக்காக படித்துக்கொண்டே, பகுதிநேர வேலைக்கு செல்கின்றனர்.
சிரமங்களுக்கு மத்தியில் கல்வியிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்துகின்றனர். இதுபோன்ற ஊக்கத்தொகை, விளையாட்டில் தடையின்றி சாதிக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சாதிக்க உதவும்
கோவை மாவட்ட தடகள சங்க தொழில்நுட்ப தலைவர் சீனிவாசன் கூறுகையில், ”1980களில் சீனா போன்ற வெளிநாடுகளில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்து உணவு போன்ற ஆரோக்கியம் சார்ந்த தேவைகளுக்காக, மாதம் தோறும் ஊக்கத்தொகை வழங்குவது அறிமுகம் செய்யப்பட்டது.
”அதேபோல், இங்கும் எங்கள் சங்கம் சார்பில் வழங்குகிறோம். இதனால், விளையாட்டில் தடையின்றி சாதிக்க முடியம்; ஆரோக்கியமும் பேண முடியும்,” என்றார்.