ஏற்றுமதி சான்றிதழ் பெற மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு

0
10

அன்னுார் : ‘வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய, சான்றிதழ் பெற மானியம் வழங்கப்படுகிறது,’ என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதி தொடர்பான நடைமுறைகளை கடைப்பிடித்து, ஆவணங்கள் மற்றும் சான்றிதழ் பெறுவதை எளிதாக்கி, ஏற்றுமதி செய்வதை அரசு ஊக்குவிக்கிறது. இதனால் விவசாயிகளின் வருமானம் மும்மடங்காகும். ஏற்றுமதி சான்றிதழ் பெறுவதற்கு அரசு 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள தென்னை, சின்ன வெங்காயம், சிறுதானியங்கள், வெள்ளரி ஆகியவற்றை பயிரிடும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி அல்லது அதற்கு பின்னர், இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு பதிவு செய்து, உறுப்பினர் சான்றிதழ், டிஜிட்டல் கையொப்பம், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தில் உரிமம் பதிவு செய்ததற்கான ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால். பரிசீலனைக்கு பிறகு ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு திருப்பி வழங்கப்படும். அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

எனவே, ஏற்றுமதியில் ஆர்வம் உள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை, 96293 29233, 90034 54009, ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம், ‘ என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.