வால்பாறை; வால்பாறையில், யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் பருவ மழைக்கு பின், வன வளம் செழிப்பாக மாறியதால், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, ரொட்டிக்கடை, சோலையாறு, அக்காமலை, உருளிக்கல், முடீஸ், முத்துமுடி, நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில் யானைகள் தேயிலை காட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இரவு நேரங்களில் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் பகல் நேரத்திலேயே யானைகள் முகாமிடுவதால், பணி முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் தொழிலாளர் வீடு மற்றும் கடைகளை இடித்துசேதப்படுத்தி வருகிறது.
யானை தாக்கி தொழிலாளர்களும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் நாள் தோறும் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவைகளை பயிரிடக்கூடாது. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் விறகு
தேட செல்வதை தவிர்க்க வேண்டும்.
எஸ்டேட் பகுதியில் தனித்தனியாக முகாமிட்டுள்ள யானைகள் குறித்த தகவல்களை, வனத்துறையினர் குறுஞ்செய்தி வாயிலாக தொழிலாளர்களுக்கு தினமும் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வந்தால், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
யானைகள் முகாமிட்டுள்ள தேயிலை காட்டில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்லக்கூடாது. வனவிலங்குகளால் தான் இயற்கை பாதுகாப்பாக உள்ளது. வனவிலங்குகளை துன்புறுத்தாமல், அவற்றுடன் இணைந்து வாழ்வோம். யானைகள்
நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு, கூறினர்.