அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் சரியாக 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக் குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக் குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழி மொழிந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் இறுதியாக ஏற்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
கிளை, ஊராட்சி, நகராட்சி, ஒன்றிய, வட்ட, மாவட்ட செயலாளர்களுக்கு பாராட்டுக்கள்.
விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்துள்ளீர்கள். சிலுவம்பாளையத்தில் 1974 கிளைச் செயலாளராக இணைந்தேன். என்னுடைய பகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. கொடிக்கம்பத்தை நடுவேன், அதனை காங்கிரஸ் கட்சியினர் பிடுங்கிவிடுவார்கள். அவ்வளவு வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பணியாற்றினேன்.
ஜெயலலிதாவிடம் நற்பெயரை பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஜெயலலிதா எண்ணத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு கொடுத்த துறையில் முத்திரை பதிக்க வேண்டும். என்னுடைய பணியைப் பார்த்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். அ.தி.மு.க.வுக்கு எவ்வளவோ பிரச்னைகள் வந்தன.
கட்சிக்காக உழைப்பவர்கள் வெளியேற மாட்டார்கள். எட்டப்பனாக வேலை பார்ப்பவர்கள் வெளியே செல்லலாம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் அதிக ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் முத்தானவை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை செவ்வணே நிறைவேற்றுவோம். ஒரு மாதம் கூட ஆட்சி நிலைக்காது என கூறிய ஸ்டாலினே அதிர்ந்து போகும் அளவுக்கு நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தோம்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்பது மக்களின் எண்ணம். இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எனக்கு தெரியும். தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணத்தை செயல்படுத்தினால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஓ.பன்னீர் செல்வத்திடம் இது தொடர்பாக பலமுறை பேசப்பட்டது.விட்டுக்கொடுத்தேன் விட்டுக்கொடுத்தேன் என்று சொல்கிறார். எதை விட்டு கொடுத்தீர்கள், நீங்கள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை, நாங்கள்தான் விட்டுக்கொடுத்தோம்; ஜெயலலிதாவின் வெற்றிக்கு தடையாக இருந்த நீங்களா விசுவாசி.
பொதுக்குழுவை கூட்ட இருவரும் இணைந்து அனுப்பிய கடிதத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார். உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு அந்த கட்சிக்கு எதிராக செயல்படுபவர் இந்தியாவிலேயே ஓ.பன்னீர் செல்வம் மட்டும்தான். தி.மு.க. மாதிரி கம்பெனியா அ.தி.மு.க.? எடப்பாடி பழனிசாமி இல்லை என்றாலும் சின்னச்சாமி கூட கேள்வி கேட்பான். தனக்கு கிடைக்காத பதவி எவருக்கும் கிடைக்க கூடாது என்பதில் சுயநலம் மிக்கவர் ஓ.பன்னீர் செல்வம்
இன்றைக்கு நடந்த நிகழ்ச்சி, அ.தி.மு.க. நிர்வாகிகள் எடுத்த முடிவு. ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்மை கிடைத்தால் சரி என்று சொல்வார், இல்லை என்றால் தவறு என்பார். தலைமைக் கழகத்திற்கு ரவுடிகளுடன் சென்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழு முடிந்தவுடன் தலைமைக்கழக செல்ல திட்டமிட்டிருந்தோம். ஜெயலலிதாவின் அறையை கடப்பாறையை கொண்டு உடைத்திருக்கிறார். ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார் ? இவர் தான் கட்சிக்கு விஸ்வாசமிக்கவரா?சொந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொள்ளை அடிப்பவர் விஸ்வாசம் மிக்கவரா?
தி.மு.க.வின் கைக்கூலி ஓ.பன்னீர் செல்வம். எத்தனை ஓ.பன்னீர் செல்வம் வந்தாலும் அ.தி.மு.க.வில் ஒரு தொண்டனையும் பிரிக்க முடியாது. ஓ.பன்னீர் செல்வம், ஸ்டாலின் இணைந்து தலைமைக் கழகத்தில் இந்த செயலை செய்துள்ளீர்கள். என்னை பழைய பழனிசாமி என நினைச்சுட்டீங்களா ?.
எங்களை அழிக்க நினைப்பவர்கள் அடியோடு அழிந்து விடுவார்கள். கே.பி.கந்தன், விருகை ரவி, உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கொட்ட கொட்ட தலை நிமிரும். கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் என்ன ஆகும் என்பதை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும், எவராலும் தடுக்க முடியாது.
வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதற்கும் தயாராக இருப்போம். ஓ.பன்னீர் செல்வம் , வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் உணவருந்திவிட்டு செல்ல வேண்டும். அனைவரும் தலைமைக் கழகம் சென்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என கூறினார்.