கோவை: கோவை மத்திய சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தும் குழப்பம் நீடிக்கிறது.
நெல்லை கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ், 33. இவர் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக கடந்த 2016-ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை தொழிற்கூடத்தில் வேலை செய்து வந்த அவர் கடந்த, ஜன., மாதம் 27ம் தேதி சிறையில் உள்ள கழிவறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரின் பேண்ட் நாடாவை பயன்படுத்தி துாக்குபோட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், அவரின் உடல் பிரேத பரிசோதனையில் கழுத்து எலும்பு முறிந்து இருந்தது தெரியவந்தது. துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் கழுத்து எலும்பு முறியாது. 3 முதல் நான்கு நபர்கள் கடுமையாக தாக்கினால் மட்டுமே கழுத்து எலும்பு முறிய வாய்ப்புள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கைதி ஏசுதாஸ் சென்ற கழிவறை இருக்கும் இடமான 8-வது பிளாக் பகுதியில் அன்று பணியில் இருந்த துணை ஜெயிலர் மனோரஞ்சிதம், உதவி சிறை அதிகாரி விஜயராஜ், சிறை தலைமை காவலர் பாபுராஜ், சிறை காவலர் தினேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சந்தேக மரணம் என ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், உதவி கமிஷனர் கணேஷ் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். கோவை 3வது மாஜிஸ்திரேட் கோர்ட் மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
போலீசார் தரப்பில் சிறை வாசிகள், போலீஸ், அதிகாரிகள் என சுமார் 560 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எனினும் சரியான ஆதாரம் மற்றும் தகவல்கள் கிடைக்காததால் வழக்கு விசாரணை அப்படியே நிற்கிறது. போலீசார் தெரிவிக்கையில், தங்களின் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், எங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு சில தகவல்களில் அடிப்படையில் வழக்கை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், மாஜிஸ்திரேட் விசாரணையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது, வரை மாஜிஸ்திரேட் அறிக்கை கிடைக்காததால் தொய்வு ஏற்படுகிறது.
போலீசாரின் விசாரணையில் ஏசுதாஸின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கடிதம் கிடைத்துள்ளது. மேலும், சக கைதிகளிடம் நடத்திய விசாரணையில் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் மனைவியுடன் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும், இரண்டு, மூன்று நாட்களாக சோகமாகவும் இருந்துள்ளார். போலீஸ் தரப்பில் சில சந்தேகங்கள் உள்ளன. எனினும் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே முழு விவரம் தெரியவரும். போலீசார் தரப்பில் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், ”போலீசாரின் விசாரணையில் சிலர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆதாரம் இன்றி, நீதிமன்ற காவலில் இருப்போரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. இதுவும் இந்த வழக்கு இழுத்தடிப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது,” என்றார்.