எந்நேரமா இருந்தாலும் பெண்கள், குழந்தைகளுக்கு தொந்தரவா 181க்கு கூப்பிடுங்க!

0
20

கோவை: தமிழக சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா வரவேற்றார்.

அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான வன்முறைகள் நடக்கவே கூடாது என்பதே நமது நோக்கம். எந்தவொரு நெருக்கடியான சம்பவமாக இருந்தாலும், போலீசாரை தொடர்பு கொள்ளலாம். ‘காவலன் செயலி’ மூலம் தொடர்பு கொள்ளலாம்; மகளிர் போலீசார் உதவுவர். பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், 1098 என்ற எண்ணுக்கு, தொடர்பு கொள்ளலாம்.

181 என்ற எண்ணுக்கும் தகவல் சொல்லலாம்; அனைத்து வகையான ‘ஹெல்ப்’ கிடைக்கும்; 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவ – மாணவியர் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். அவினாசிலிங்கம் பல்கலை மாணவியர், தற்காப்பு கலை நிகழ்ச்சி நடத்தினர்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மகளிர் திட்ட அலுவலர் மதுரா, அவினாசிலிங்கம் பல்கலை அம்சமணி, பிரேமலா பிரியதர்ஷினி, சரவணபிரபா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, ‘ப்ரூக் பீல்ட்ஸ்’ சி.இ.ஓ., அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.