எடப்பாடி அரசு நீடிக்காது- சூலூரில் தினகரன் பேச்சு

0
109
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் கே.சுகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், நீலாம்பூர், குரும்பபாளையம், கருமத்தம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சுற்றி வருகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு ஆசை இருந்தால் எனது சித்தி (சசிகலா) சிறைக்கு செல்லும்போதே நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கலாம். இல்லை என்றால் ஜெயலலிதா இறந்த அன்றே ஆகி இருக்கலாம். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கியா முதல்-அமைச்சரானார். அவருடன் இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அணி மாற முயற்சித்தனர். இது கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரியும்.
சசிகலாவை அ.தி.மு.க. -Iபொதுச்செயலாளராக்கியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும்தான். அதுபோன்று முதல்-அமைச்சராக இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தகுதியற்றவர், சசிகலாவை முதல்-அமைச்சராக மாற்ற வேண்டும் என்று சொன்னவர்களே அவர்கள்தான். 2 நாட்கள் எங்களுடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா சொன்னதும், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், அங்கு அமர்ந்து தர்மயுத்தம் தொடங்குகிறேன் என்று நாடகம் ஆடினார்.
ஓ.பன்னீர்செல்வம் சரியில்லை என்பதால்தான், கொங்கு மண்டலத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக வைத்தோம். அடுத்த நாளே அவர் துரோகம் செய்துவிட்டார். இந்த கட்சியை காப்பாற்ற டி.டி.வி.தினகரன் வந்து உள்ளார் என்று ஜெயலலிதாவே கூறிவிட்டு சென்றார் என செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினாரே?. ஆனால் இப்போது தினகரனுக்கு எந்த ஊர் என்று கூறுகிறார். இதுதான் கலிகாலம். எந்த ஒரு துரோகத்துக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. 7 ஜென்மத்துக்கும் அதை அனுபவித்து ஆக வேண்டும்.
18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தார்கள். அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்துவிடக்கூடாது என்று மோடியை சந்தித்தார்கள். ஆனால் மோடியாலும் முடியவில்லை. அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. அதில் ஒரு தொகுதியில்கூட அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்று உளவுத்துறை கூறி இருக்கிறது. இதனால்தான் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளனர். அதற்கும் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எனவே வருகிற 23-ந் தேதி நீங்கள் வீட்டிற்கு செல்வது உறுதி.
இவர்களுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறித்துவிட்டு, தி.மு.க.வுடன் சேர்ந்து எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தார்கள். அதற்கு காரணம் மோடிதான். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர அவர்தான் காரணம். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மோடி நினைத்தால்கூட தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்காது. அவரால் காப்பாற்றவும் முடியாது.
துரோகத்தை வேரறுக்க, துரோகம் என்பதை இனி அரசியல்வாதிகள் பதவிக்காக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும். தன்னை முதல்-அமைச்சராக்கியவருக்கு துரோகம் செய்தவர்கள், மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்கள். நீங்கள் அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தான் ஓட்டுப்போட்டீர்கள், பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தயவு செய்து நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு தலைநிமிரவும், தமிழக மக்கள் வாழ்வு மலரவும், யாரிடமும் மண்டியிடாத, தமிழக மக்களுக்காக ஜெயலலிதா எப்படி செயல் பட்டாரோ அதுபோன்று இருக்க வேண்டும். எனவே நீங்கள் அனைவரும் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து, சூலூர் தொகுதியில் போட்டியிடும் சுகுமாரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, சூலூர் ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ராஜசேகர், ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், ஊராட்சி செயலாளர் சரவணன், அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் நீ.ரா.சுப்பிரமணியம், வடக்கு மாவட்ட செயலாளர் அலாவுதீன், மாணவர் அணி செயலாளர் சுபாஷ், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் காசிலிங்கம், சின்னியம்பாளையம் பொறுப்பாளர்கள் பாஸ்கரன், சரவணன், விஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
” data-max-height=”185.625px” />