கோவை,
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் 90–வது ஆண்டு விழா கோவையில் நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் வி.லட்சுமி நாராயணசாமி வரவேற்றார்.
விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, ஆண்டு விழா மலர் மற்றும் 90–வது ஆண்டு விழா தபால் தலையை வெளியிட்டு, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் முன்னாள் தலைவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கோவை தொழில், கல்வி, மருத்துவத்தில் முன்னேற்றம் கண்டு உள்ளது. இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. கோவையில் உள்ள மக்களிடம் தொழில் செய்வதற்கு தேவையான அறிவு சார்ந்த திறனும், கல்வியும் உள்ளது. இதுதான் கோவை முன்னேறி வருவதற்கு முக்கிய காரணம் ஆகும்.
கேரளாவில் கனமழை பெய்து அதிகளவில் வெள்ளம் சென்றாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இயற்கையை அழித்தது தான் இதற்கு முக்கிய காரணம். எனவே இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்பது மக்களும், அதிகாரிகளும் நன்றாக ஆடை அணிந்து செல்வதில் இல்லை. சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்து இருப்பதுதான். எனவே நாம் நமது நகரத்தை நேசித்து சுத்தமாக வைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. கொண்டு வந்தபோது அதில் சில பிரச்சினைகள் இருந்தன. அந்த பிரச்சினைகள் களையப் பட்ட பின்னர், ஜி.எஸ்.டி. அனைவருக்கும் உதவியாக இருக்கிறது. முன்பு பலர் வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றிக்கொண்டு இருந்தனர். ஜி.எஸ்.டி. கொண்டு வந்த பின்னர்தான் அரசுக்கு வரி செலுத்துவது அதிகரித்து உள்ளது.
வருவாய்தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம். எனவே வரி செலுத்த தகுதியான அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த முன்வர வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் 25 சதவீத மக்கள் கல்வி பெற முடியாமலும், 20 சதவீத மக்கள் எவ்வித வருமானம் இல்லாமலும் உள்ளனர். அவர்கள் மாற்றத்தை பெற மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் பல இடங்களில் முகவரி தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்துக்கு தற்போது முகவரி கிடைத்து உள்ளது. மேலும், ஊழல் மற்றும் முறைகேடு செய்வது புற்றுநோய் போன்றது. இது வந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, பின்னர் முற்றிலும் அழித்துவிடும். எனவே ஊழல், முறைகேடுகளை ஒழித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும்.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் மற்றும் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த 2 துறையிலும் கவனம் செலுத்த வேண்டும். தொழில் முனைவோர் விவசாயமும் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயம் அழியாது. கோவையில் இருந்து சில இடங்களுக்கு விமான சேவை கேட்டு நீங்கள் கோரிக்கை விடுத்து உள்ளீர்கள். அந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் பேச தொடங்கிய துணை ஜனாதிபதி, தமிழும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் நெருக்கம் என்று ஒருசில வார்த்தைகள் தமிழில் பேசிவிட்டு, பின்னர் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசினார்.
விழாவில் கலெக்டர் ஹரிகரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், தமிழக தபால்துறை தலைவர் சம்பத், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையின் முன்னாள் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் தலைவர் கே.ஜி.பக்தவச்சலம் நன்றி கூறினார்.
முன்னதாக நேற்று மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் துணை ஜனாதிபதி அங்கிருந்து கார் மூலம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளையில் நடந்த விழா முடிந்த பின்னர், மீண்டும் அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இரவில் அங்கேயே தங்கி ஓய்வு எடுத்தார். இன்று (புதன்கிழமை) பொள்ளாச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கார் மூலம் மதுரை செல்கிறார். கோவைக்கு துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.