ஊராட்சியாக நீடிக்க வேண்டும் கீரணத்தத்தில் உண்ணாவிரதம்

0
52

கோவில்பாளையம்: ‘ஊராட்சியாக தொடர வேண்டும்,’ என வலியுறுத்தி, கீரணத்தத்தில், 400க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்.

சிறந்த ஊராட்சி என ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் பெற்ற கீரணத்தம் ஊராட்சி, கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து, கடந்த ஜன. 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். கடந்த வாரம் கீரணத்தம் ஊராட்சி முழுதும் கடைகளை அடைத்து கண்டனம் தெரிவித்தனர்.

நேற்று கீரணத்தத்தில் 200 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். பொதுமக்கள் பேசுகையில், ‘மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதால், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழப்பார்கள்.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலி இட வரி, அங்கீகார கட்டணம் என அனைத்தும் உயரும். அரசின் பல்வேறு சேவைகளுக்கு அதிக தொலைவு செல்ல வேண்டி வரும். எனவே கீரணத்தம் ஊராட்சியாக தொடர வேண்டும்,’ என்றனர். இதை வலியுறுத்தி, அரசுக்கு மனு அனுப்ப கையெழுத்து இயக்கம் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டனர். 5000 பேரிடம் கையெழுத்து பெற்று, அரசுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

பல்வேறு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.