ஊதியத்துடன் வார விடுமுறை வழங்க மறுப்பதேன்? மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் குற்றச்சாட்டு

0
2

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் தங்களுக்கு, ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சமீபத்தில் குப்பை அகற்றும் பணியில், புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் வாரம் ஒரு நாள் விடுப்பெடுத்தால் சம்பளம் வழங்க முடியாது என்றும், ஞாயிற்றுக்கிழமையன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை மறுக்கப்படுவதாகவும், தூய்மை பணியாளர்கள் புலம்புகின்றனர்.

இது தொடர்பாக, பாரதிய கோவை மாவட்ட தூய்மை பணியாளர் பிரிவு பொதுச் செயலாளர் ஸ்டாலின் பிரபு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பிய மனுவில்:

தற்போதைய புதிய ஒப்பந்த நிறுவனங்கள், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், அந்த நாளுக்கான சம்பளம் வழங்கப்படாது; ஞாயிறு விடுமுறைக்கும் சம்பளம் கிடையாது என்று வடக்கு மண்டலங்களில், பணியாளர்களிடம் கூறி வருகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தால் மட்டுமே வார விடுமுறை கிடையாது என ஒருமித்த முடிவுக்கு வந்தோம்.

ஆனால் தற்போது, சந்தர்ப்ப சூழ்நிலை கருதி, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை கிடைக்காது என்கின்றனர்.

எனவே, ஊதியத்துடன் கூடிய வார விடுமுறையை, அனைத்து ஒப்பந்தத் தூய்மை பணியாளர்களுக்கும் முழுமையாக வழங்கப்படுவதை, உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.