உழவர் செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!:  விவசாயிகளிடையே பிரபலமாகிறது

0
5

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ‘உழவர் செயலி’யை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விவசாயிகளிடையே இந்த உழவர் செயலி பிரபலமாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கான உழவர் மொபைல் போன் செயலியை இதுவரை, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கடந்த, 2018ம் ஆண்டு ஏப்., மாதத்தில், 9 முக்கிய சேவைகளுடன் ‘உழவர் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில், அரசின் மானிய திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, இது தவிர, பயிர் காப்பீடு விபரம், அந்தந்த பகுதியில் உள்ள உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்தல், உற்பத்தி செய்யப்பட்ட விலைப் பொருள்களுக்கான சந்தை விலை நிலவரங்கள், வானிலை அறிவுரைகள், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், உழவர்களின் கருத்துகள், பூச்சி நோய் கண்காணிப்பு அதை கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் வேளாண் துறையின் பரிந்துரைகள், அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் ஆகியவை குறித்து, தேவையான சேவைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மொத்தம் உள்ள விவசாயிகளில், 4,114 பேர் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறையினர் கூறியதாவது; ”மொபைல் போன் உழவர் செயலி சிறந்த முறையில் செயல்படுவதால், விவசாயிகள் மொபைல் போன் வழியாகவே தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெரியநாயக்கன்பாளையம், 515, பிளிச்சி கிழக்கு, 344, கூடலுார் வடக்கு, 327, துடியலுார், 307, கவுண்டம்பாளையம், 261, நாயக்கன்பாளையம், 208, நஞ்சுண்டாபுரம், 252, வீரபாண்டி ஊராட்சி, 249, வீரபாண்டி பேரூராட்சி, 211, குருடம்பாளையம் 202, பன்னிமடை, 197, சின்ன தடாகம், 193, பிளிச்சி மேற்கு, 190, சோமையம்பாளையம், 175, நரசிம்மநாயக்கன்பாளையம்,166, கூடலுார் தெற்கு,154, இது தவிர, வீரகேரளம், புலியகுளம், தெலுங்குபாளையம்,

அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் என மொத்தம், 4,114 பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.