உள்ளூர் திட்ட குழும 104.74 கி.மீ., ரோடு சீரமைக்க ரூ.40 கோடி ஒதுக்கியாச்சு நிதி

0
12

கோவை; கோவையில், 104.74 கி.மீ., துாரத்துக்கு ரோடு சீரமைக்க, ரூ.42.65 கோடி செலவாகுமென மாநகராட்சி கணக்கிட்டிருக்கிறது; இதற்கு உள்ளூர் திட்ட குழும நிதியில், 40 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது.

கோவை மாநகராட்சி பராமரிப்பில், 3,236.96 கி.மீ., சாலைகள் உள்ளன. இதில், 2,659.67 கி.மீ., தார் சாலை; 258.88 கி.மீ., மண் சாலை; 294.05 கி.மீ., சிமென்ட் சாலையாக உள்ளன. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்த, 2,659 கி.மீ., நீளத்துக்கு சாலைகளை வெட்ட மாநகராட்சி உத்தேசித்துள்ளது.

அதில், 1,815.31 கி.மீ., நீளத்துக்கு சாலைகள் வெட்டப்பட்டுள்ளன. இதில், 725.18 கி.மீ., நிளத்துக்கு மட்டும் சாலை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள, 1,090.13 கி.மீ., நீளமுள்ள சாலைகள் சீரமைக்க வேண்டியுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில், 104.74 கி.மீ., நீளத்துக்கு, 652 சாலை பணிகள் மேற்கொள்ள, ரூ.42.65 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, 29 சிப்பங்களாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணியை மேற்கொள்ள, உள்ளூர் திட்டக்குழும நிதியில், 40 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மீதித்தொகை ரூ.2.65 கோடியை, மாநகராட்சி பொது நிதியில் செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது.

‘யுனிக்கோடு’ எண்

இனி, மாநகராட்சி பகுதியில் ஐந்தாண்டுக்கு ஒருமுறையே, புதிதாக சாலை போட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், ஒவ்வொரு சாலையின் பெயர் மற்றும் நீளம் குறிப்பிட்டு, ‘யுனிகோடு’ எண் குறிப்பிடப்படுகிறது.இதற்கென, ‘சாலைப்பதிவேடு’ பராமரிக்கப்படுகிறது. அதில், 51.33 கி.மீ., நீளமுள்ள, 344 சாலைகள், 67.28 கி.மீ., நீளமுள்ள, 438 தார் சாலைகளின் விபரங்கள், சாலைப்பதிவேட்டில் பதியாமல் விடுபட்டிருந்தன. மேயரின் முன்அனுமதி பெற்று, பதியப்பட்டு, ‘யுனிக்கோடு’ எண்கள் பெறப்பட்டுள்ளன.