நாட்டின் உச்சநிலைக் கல்விக் கூடங்களாகத் திகழ்ந்து, இந்திய தொழில்நுட்பத்தை உயர்த்தி, வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப நிலையின் உயரத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது, கரக்பூர், பாம்பே, மதராஸ், கான்பூர், டில்லி ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி.க்களை தொடங்கினார்.
இந்த ஐ.ஐ.டி.களில் பொறியியல் துறைகள் மட்டுமே துறை என்ற நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கல்விக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட கணிதம், பவுதீகம், ரசாயனம், பொருளாதாரம், ஆங்கிலம் போன்ற துறைகள் உதவித்துறைகள் என்ற நிலையில், சில ஆசிரியர்களை மட்டுமே கொண்ட நிலையில்தான் இயங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது ஐ.ஐ.டி.களில் உதவித் துறைகள் தான் அந்நிலையத்தின் செலவு, இடவசதி போன்றவற்றில் பாதிக்கு மேல் கைக்கொள்கின்றன. சிறந்த ஆராய்ச்சி மாணவர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க முடியாததுடன், தரமும் தாழ்ந்து வருவதால் ஐ.ஐ.டி.க்களை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
குறிப்பாக மாணவர்களை பாதிக்கும் நடவடிக்கைகள் ஒழுக்கமின்மை, கருத்தூன்றி கற்கும் சூழலின்மை, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை உடனுக்குடன் அறிந்து, அதைப் பின்பற்றி நாமும் தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்தவர்களாகத் திகழ அவசரமாகச் செய்யவேண்டியவை:-
* ஒழுக்கம், கருத்துயர்வு, அறிவுக்கூர்மை, கடின உழைப்பு போன்றவற்றில் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், குறிப்பாக முதிர்ந்த ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழவேண்டும்.
* மாணவர்களின் மனப்பாங்கைச் சீர்த்தூக்கிப்பார்த்து, ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்டவர்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சேர்த்து, தரமான பயிற்சியளித்து, உயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக உருவாக்க வேண்டும்.
* ஒரு மாணவர் பிஎச்.டி (முனைவர்) பட்டம் பெறுமுன், தனது ஆய்வு முடிவுகளைத் தரமான, உலகப்புகழ்பெற்ற ஆய்வேடுகளில் பதிப்பிப்பதை உறுதிசெய்து கொண்ட பின்பே பட்டம் வழங்க வேண்டும்.
* உயர்ந்த தரத்தை அடைய மாணவர்களின் எண்ணிக்கையை கண்மூடித்தனமாக உயர்த்தாது கட்டுக்குள் வைத்துக்கொள்வது இன்றியமையாதது.
* இதற்கும் ஒருபடி மேலாக, உயர்ந்த தரம்வாய்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள் அத்தகு தகுதி உடையவர்களாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவை போன்ற கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க, கல்வி நிலையங்களுக்கு ஒற்றைத் தலைமை என்ற தற்போதைய சூழலை அகற்றி கூட்டுத்தலைமை என்ற நிலையை அமைத்தல் ஒன்று தான் உகந்தவழி. இச்சூழல் அமைந்தால், இந்தியாவும் தொழில்நுட்பத் துறையில் உயர வழிபிறக்கும்.
அதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத் துறைகள் மட்டும் தான் மாணவர்-ஆசிரியர் விகிதத்தை தகுந்த அளவில் கொண்டிருக்க வேண்டும். துணைத் துறைகளில் அந்தத் துறை அறிவை தொழில்நுட்பக் கல்விக்குத் தேவையான அளவுக்கு மட்டும் கற்பிக்க ஒரு சிலரை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும்.
துணைத்துறைகளில், பட்டம், பட்டயம், ஆராய்ச்சி போன்ற எந்த படிப்பும் படிக்கும் நிலை இருக்கக் கூடாது. அதேபோல் வளர்ந்த நாடுகளிலுள்ள தரத்தை, எல்லா நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலுள்ள கல்வி நிலையங்களின் தலைவர் பதவிக்கு அமர்த்தப்படுபவரின் தரம் மிக உயர்ந்ததாக இருப்பதை அவர்கள் உறுதி செய்வதால்தான், அங்குள்ள கல்வி நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஐ.ஐ.டி.க்களின் இயக்குனர் பதவியை அகற்றிவிட்டு மூத்த பேராசிரியர்கள் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து நிர்வகிக்க செய்யலாம். அதேபோல் ஐ.ஐ.டி.க்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுபவர்களின் கல்வித்தகுதியில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், கல்வி நிலையத்தின் தலைமைப் பதவியில் அமருபவர்கள், உயர்ந்த கல்வித்தரம், சிறப்பான ஆராய்ச்சியின் குறியீடு, கற்பிக்கும் திறன், குணநலம் போன்ற எல்லா நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அதனால் அந்நாடுகளில் தரமுள்ள ஒருவர் உயர்வது உறுதி என்ற சூழல் நிலவுகிறது. நம்முடைய ஐ.ஐ.டி.களை மேம்படுத்தினால் மட்டுமே, அவை உலக அரங்கில் மிளிரும்.