வால்பாறையில் உதவிப்பொறியாளர் அலுவலகத்தை காட்டு யானைகள் சூறையாடின.
உதவி பொறியாளர் அலுவலகம்
வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து கேரள வனப் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் தொடர்ந்து வால்பாறை பகுதியில் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. ரேஷன் கடை, சத்துணவு மையம், தொழிலாளர்கள் குடியிருப்பு, பள்ளி கட்டிடங்கள், கோவில்கள் என சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. பல சமயங்களில் பட்டப்பகலில் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு நின்று விடுவதால் தேயிலை இலை பறிக்கும் பணியும் பாதிக்கப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் தொடர்ந்து இரவு பகலாக காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்கோனா எஸ்டேட் சுற்று வட்டார பகுதியில் கடந்த 10 நாட்களாக முகாமிட்டு வரும் காட்டு யானைகள் கூட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நீரார் அணை பகுதியில் உள்ள பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்தன.
சூறையாடிய காட்டு யானைகள்
பின்னர் அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலி, பீரோ மற்றும் பீரோவில் இருந்த கோப்புகள் அலுவலக பதிவேடுகள் அனைத்தையும் சேதப்படுத்தி விட்டு அலுவலகத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கதவு ஜன்னல்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. நீரார் அணை பயணிகள் நிழற்குடை அருகில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த டீக்கடையையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு யானைகள் சென்றுள்ளது.பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தை காட்டு யானைகள் சூறையாடிச் சென்ற சம்பவம் நீரார் அணைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாம்பள்ளி வனத்துறையினர் நீரார் அணை பகுதியில் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.