உடலை கிழித்த சாலை தடுப்பு; அகற்றியதால் மக்கள் ‘அப்பாடா’

0
7

கோவை, : விபத்தை ஏற்படுத்திய ஆபத்தான சாலை தடுப்பை, போக்குவரத்து போலீசார் அகற்றியதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கோவை கிக்கானி பள்ளி ரயில்வே பாலம் அருகில், வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பின் தகடு, வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கத்தி போல் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது.

அந்த வழியாக சென்ற வாகனங்கள், அதில் மோதி விபத்துக்கு உள்ளாகி வந்தன. இது குறித்த படமும் செய்தியும், நமது நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, காட்டூர் போக்குவரத்து போலீசார், உடைந்த பேரிகார்டை நேற்று உடனே அகற்றினர்.

போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறுகையில், ”அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், பேரிகார்டு வைத்து இருந்தோம். ஏதோ ஒரு வாகனம் மோதி, பேரிகார்டு உடைந்துள்ளது. அந்த வாகனம் எதுவென்று அறிய, ‘சிசிடிவி’ கேமராவை சோதனை செய்து வருகிறோம். அந்த இடத்தில் சிமென்ட் பிளாக்குகள் வைத்து, நிரந்தரமாக சென்டர் மீடியன் அமைக்கவுள்ளோம்,” என்றார்.