கோவை; குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கான, வலுவான அடித்தளத்தைக் கட்டமைக்கும் பள்ளி எது எனத் தேர்வு செய்ய உதவும், ‘தினமலர்’ நாளிதழ் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி, கோவையில் இன்று துவங்குகிறது.
உலகின் ஒப்பற்ற செல்வம் கல்வி. ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அவர் கற்ற கல்விதான். நல்ல கல்வியின் அடித்தளம் பள்ளியில்தான் இடப்படுகிறது. குழந்தைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு, அவர்களின் கற்றல் திறனை உள்வாங்கி, அவர்களுக்கேற்ற பாடத்திட்டத்தை, இதர திறன்களை ஒரு சிறந்த பள்ளியால்தான் தர இயலும்.
அப்படிப்பட்ட ஆரம்பக் கல்வியைப் பெற, நம் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது. கல்வியோடு ஒழுக்கம், நற்குணங்கள், விளையாட்டு, இதர திறன்கள் என எந்தெந்தப் பள்ளிகள் எதற்கு முக்கியத்துவம் தருகின்றன, இவற்றை ஒப்பிட்டு, எது நம் குழந்தைக்குச் சரியான பள்ளி எனத் தேர்வு செய்வதில் குழப்பம் வருவது இயல்பே.
இதற்காக ஒவ்வொரு பள்ளியாக சென்று விசாரிப்போம். இந்த சிரமத்தைத் தவிர்க்க, மாணவர்கள் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் ‘தினமலர்’ நாளிதழ், ‘பள்ளி வழிகாட்டி 2025’ என்ற ஒரே கூரையின் கீழ், கொங்கு மண்டலத்தில் மிகச் சிறந்த பள்ளிகளோடு கலந்துரையாடும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
‘தினமலர்’ நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், பள்ளி வழிகாட்டி 2025, நிகழ்ச்சிதான் அந்த அரிய வாய்ப்பு. இந்த நிகழ்ச்சி, கோவையில் இன்று துவங்குகிறது.
கோவை, அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் அரங்கு அமைக்கின்றன.
பெற்றோர், ஒவ்வொரு பள்ளியின் சிறப்பம்சங்களையும் நேரில் கேட்டு, அறிந்து கொள்ள மிகச்சிறப்பான வாய்ப்பு. ப்ரீ கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை அட்மிஷன் துவங்குகிறது. காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியை, நேஷனல் மாடல் பள்ளி இணைந்து வழங்குகிறது. பிரிட்ஜ்வுட் சர்வதேச பள்ளி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளி, அத்வைத் அகாடமி பள்ளிகள் உடன் கரம் கோர்க்கின்றன.
நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம். வாருங்கள்… உங்கள் குழந்தையின் ‘கலர்புல்’ எதிர்காலத்தைக் கட்டமைப்போம்!