உக்கடத்தில், வாய்க்கால் ஆக்கிரமிப்பு – 268 வீடுகள் இடித்து அகற்றம்

0
102
கோவை உக்கடம் அருகே உள்ள கவுஸ் மைதீன் நகரில் வாய்க்காலை ஆக்கிரமித்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 268 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.
இந்த வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு உக்கடம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்தவர்கள் பெரும்பாலானவர்கள் காலி செய்து, குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு இடம்பெயர்ந்து சென்றனர். சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் 268 வீடுகளை இடித்து அகற்ற மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில், ஊழியர்கள் 50 பேர், 4 பொக்லைன் எந்திரங்களுடன் அந்த பகுதிக்கு சென்று இடிக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் 100 போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு குடியிருந்தவர்கள் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து காலி செய்தனர். அந்த பகுதியில் ஒரு சிறிய அம்மன் கோவில் இருந்தது. தற்காலிகமாக அந்த கோவிலை அகற்றும் பணி கைவிடப்பட்டு, 268 வீடுகள் மட்டும் இடித்து அகற்றப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, நீர்நிலைப்பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை கருதியும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு குடியமர்த்தப்படுகிறார்கள்.
கோவை நகரில் நீர்நிலைப்பகுதி ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.