‘ஈஷா கிராமோத்சவம்’ கிராமியத்தை கொண்டாடும்

0
151

கோவை : கிராமிய விளையாட்டு திருவிழாவில் நேற்று இடம்பெற்ற, இரண்டாம் கட்ட மண்டல அளவிலான வாலிபால், எறிபந்து போட்டிகளில் இருபாலர் அணிகள் அசத்தின.

கிராமப்புற மக்களுக்கான, 16வது ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் நவ., 16 முதல் நடந்து வருகிறது. தவிர, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கிராமிய உணவுத் திருவிழாவும் பார்வையாளர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 11 முதல் நிலை போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலுார் உட்பட ஆறு மண்டலங்களில் நேற்று நடந்தன.

கோவையில் கொங்குநாடு கலை கல்லுாரி மைதானத்தில் நடந்த, ஆண்கள் வாலிபால் போட்டியில், 17 அணிகளும், பெண்களுக்கான எறிபந்து போட்டியில், 19 அணிகளும் விளையாடின.

ஆண்களுக்கான வாலிபால் முதல் போட்டியில் இருகூர் அணியும், வெள்ளியங்காடு அணியும் மோதின.

பரபரப்பான ஆட்டத்தில், 25-16, 25-15 என்ற புள்ளி கணக்கில், இருகூர் அணி வென்றது. பெண்களுக்கான எறிபந்து போட்டியில் எஸ்.ஜி.பி., அணியும், எவர் கிரீன் அணியும் மோதின. கடும் போட்டிகளுக்கு மத்தியில், 15-13, 7-15, 8-15 என்ற புள்ளி கணக்கில், எவர் கிரீன் அணி வெற்றி பெற்றது.

இதற்கிடையே, பார்வையாளர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வாலிபால், எறிபந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் வரும், 28ம் தேதி ஈஷா யோகா மையத்தில், இறுதி கட்ட போட்டிகளில் பங்கேற்கின்றன.