வால்பாறை : நீலகிரி, கொடைக்கானலை போன்று, வால்பாறைக்கும் ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். அதற்கேற்ப ‘பார்க்கிங்’ வசதி இல்லாததால், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு, பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கிறது.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை, சுற்றுலா பயணியர் வனப்பகுதியில் வீசி செல்வதால், வன விலங்குகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியரின் மனதில் இடம் பிடித்த வால்பாறையை பாதுகாக்க வேண்டும். இங்குள்ள வனவளம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலங்களில் மாசில்லாமல் பேணிக்காக்கவும், இயற்கையுடன் இணைந்து மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வரவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சுற்றுலா பயணியர் வருகையால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நீலகிரி, கொடைக்கானலை போன்று, வால்பாறையிலும் ‘இ-பாஸ்’ நடைமுறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.