‘இ — சலான்’ அனுப்பி இதோ புதுவித மோசடி; கோவை சைபர் கிரைமில் அடுத்தடுத்து புகார்

0
9

போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும், ‘இ சலான்’ போல், போலி சலான் அனுப்பி புது வித மோசடி நடப்பதாக புகார் வந்துள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், அது சார்ந்த சைபர் கிரைம் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் டிரேடிங், பகுதி நேர வேலைவாய்ப்பு, டிஜிட்டல் அரெஸ்ட், முத்ரா லோன் என, பல வகையில் மோசடி நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

மோசடிகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு மோசடி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால், மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்றத்துவங்குகின்றனர். தற்போது, சமீப காலமாக புதுவித மோசடி ஒன்று நடக்கிறது.

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மீறுவதை கண்காணிக்க சாலையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சாலை விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஆன்லைன் வழியில் போலீசார் அபராதம் விதித்து, ‘இ சலான்’ வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிற்கு அனுப்புகின்றனர். அபராதத்தை செலுத்த அரசு ‘பரிவாகன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது, போலீசார் அனுப்புவது போல், போலியாக ஒரு ‘சலானை’ மோசடி நபர்கள் அனுப்புகின்றனர். அதற்கு கீழே, அபராதம் செலுத்துவதற்கான ‘லிங்க்’ மற்றும் செயலியின் ‘ஏ.பி.கே.,’ ஒன்றையும் அனுப்புகின்றனர்.

அதை பதிவிறக்கம் செய்து, அபராதம் செலுத்த, வாகன ஓட்டிகள் தங்கள் வங்கி விவரங்களை பதிவிடும் போது, அதை மோசடி நபர்கள் அறிந்து கொண்டு, வங்கியில் இருக்கும் பணம் அனைத்தையும், திருடி விடுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இந்த மோசடி தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு 5 புகார்கள் வந்துள்ளன. இது போன்ற சலான் வந்தால், அரசின் பரிவாகன் செயலியில் பரிசோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

தெரியாத நபர்களிடம் இருந்து வரும் ஏ.பி.கே., செயலிகளை மொபைலில் பதிவிறக்கம் செய்யக்கூடாது என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.